திடீரென வழக்கத்துக்கு மாறான சத்தம் காட்டுக்குள் கேட்டதால் நாங்கள் சற்று உஷாரானோம்.அந்த அளவிற்கு குரங்குகள் சத்தமிட்டதை அதுவரை கேட்டதில்லை.உற்றுப்பார்த்த பிறகு தான் தெரிந்தது ஒரு மானை 3 நாய்கள் துரத்திக்கொண்டிருந்தது தெரிந்தது.உடனே நாய்களை விரட்டியபடி ஓடினோம்.அந்த மான் கடுமையாக போராடியும் தப்பிக்க முடியாததால் தண்ணீருக்குள் இறங்கி ஓடியது.
ஒரு நாய் மட்டும் தண்ணீரில் நீந்த முடியாமல் கரையிலே நின்று கொள்ள மற்ற நாய்கள் விடாமல் துரத்தியது.ஒரு இடத்திற்கு மேல் ஓட முடியாமல் கலைத்து போனது மான்.அந்த நாய்கள் மானில் பின் பக்க தொடையை கடித்து குதற தொடங்கியது.நாங்களும் முடிந்த வரை நாய்களை விரட்ட தொடங்கினோம்.எங்களால் ஆற்றை கடந்து போக முடியவில்லை.கல்லை எடுத்தி வீசினாலும் அவ்வளவு தூரம் போக வில்லை.
”காலம் காலமாக
வண்டி இழுக்கின்றன கொம்புகளை மறந்த மாடுகள்”என்ற யாரோ எழுதிய கவிதை தான் நினைவிற்கு
வந்தது.அவ்வளவு பெரிய கொம்பு இருந்தும் அதை பய்ன்படுத்த தெரியாத மானை நினைத்து வருத்தப்படுவதா
கோபப்படுவதா என் தெரியவில்லை .
காட்டுக்குள் ஒரு மிருகம் மற்றொரு மிருகத்தை சாப்பிடுவது இயல்பு தான்.ஆனால் துரத்தியது காட்டு நாயாக இருந்திருந்தால் விட்டுருக்கலாம்.துரத்தியது வீட்டு நாய்கள்.வழி தவறி போன மானை நீண்ட தூரம் துரத்தி வந்திருக்கிறது.அந்த நாய்களுக்கு மானை விட்டால் வேறு உணவே இல்லையென்றால் நாம் விரட்டியது தவறு தான் .ஆனால் வீட்டில் நன்றாக சாப்பிட்டு கொழுத்த நாய்களுக்கு மான் எதற்கு?.அப்படியே சாப்பிட்டாலும் ஒரு கிலோ கறியை சாப்பிட்டு விட்டு போய்விடும்.அதற்காக கண்முன்னே ஒரு மான் சாவதை வேடிக்கை பார்க்க முடிய வில்லை.
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வசதியாக அமைந்திருந்தால் நமக்குள் ஒளிந்திருக்கும் சல்கான்மான் (தெரிந்தே செய்த பிழை தான்) வெளியில் வந்திருப்பாரோ என்னமோ :).களி திங்க வேண்டும் என்ற பயத்தாலோ என்னவோ நமக்குள் தூங்கிக்கொண்டிருந்த சமூக ஆர்வலர் வெளியே வந்து விட்டார்.
உடனடியாக தம்பி சபாவும்,ஈழவேந்தன் அண்ணனும் வனத்துறயினரிடம் தகவல் சொல்ல கிளம்பி விட்டனர்(எந்த போனிலும் சிக்னல் இல்லை).நான் நாய்களை விரட்டிய படி கேமராவில் படம் பிடிக்க முயன்றேன்.
ஓட்டம் என்பது ஒன்று தான் என்றாலும் பசிக்காக ஓடுகிறவன் ஓட்டமும் ,உயிருக்காக ஓடுகிறவன் ஓட்டமும் எவ்வளவு மாறுபட்டது என்பதை கண்கூடாக காண முடிந்தது.
ஒன்றை ஒன்று தின்று வாழ்வது உலக நியதி தான் என்று மூளை வாதம் செய்தாலும்,அது எதையுமே காதில் கேட்காமல் உயிருக்காக போராடுகிறவரின் பக்கம் மனம் சேர்ந்துவிடுவது மனித இயல்பு.
ஒரு குறிப்பிட்ட நேரம் போராடிய மான் எதிர் புறம் ஓடிய அதிகமான நீரோட்டத்தையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் இறங்கி நீந்தியது.நாய்கள் நீந்த முயன்று தோற்று விட்டது.ஆனால் எப்படியும் இந்த பக்கம் வந்து தான் ஆகனும் என்று கரையிலே உட்காந்து கொண்டன நாய்கள்.
பலத்த காயத்துடன் ஒரு திட்டில் ஏறிய மான் ..ஒரு கல் இடுக்கில் மாட்டி விழுந்து விட்டது.சிறிது நேரத்தில் வனத்துறயினர் ( பெருமாள்,மாணிக்கம்)வந்தனர்.வேகமான நீரோட்டத்தையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து நீந்தி நாய்களை விரட்டினார்.ஆனால் மான் இருக்கிற திட்டிற்க்கு போக முடியாது என நாங்கள் நினைத்த போதே மல மலவென இறங்கி நீந்தினார்.அதிவேகமாக ஓடிவரும் ஆற்று வெள்ளத்தையும் துணிச்சலாக அவர் நீந்திய விதம் ஆச்சர்ய படுத்தியது. கல் இடுக்கில் சிக்கியிருந்த மானை பெருமாள் விடுவித்தார்(அதை படம் பிடிக்க முடியவில்லை)
ஒரு வழியாக விடுவிக்க பட்ட மான் மறுபிறவி எடுத்ததை போல ஆவேசமாக நீந்தி கரையை அடைந்தது.
இனி நமக்கு ஆபத்தும் இல்லை என்பதை உணர்ந்த மான் காட்டை நோக்கிஓடியது.காட்டுக்குள் ஓடிய மான் ஒரு பாதுகாப்பான இடத்தை அடைந்ததும் ஒரு குன்றின் மேல் ஏறி காப்பாற்றிய எங்களை நன்றியோடு திரும்பி பார்த்திருந்திருக்கலாம்...அப்படி பார்த்திருந்தால் இதை ஒரு சிறுகதைக்கான finishingல் முடிக்க முடியும் என்கிற அறிவெல்லாம் இல்லாததால்..அந்த மான் திரும்பியும் பார்க்கவில்லை ஒன்றுமில்லை. ”தப்பிச்சதே போதும்டா சாமி” என ஒரே ஓட்டமாக ஓடி காட்டில் மறைந்து விட்டது.
வனத்துனயினரை பாராட்டி விட்டு உங்களை காரிலேயே கொண்டு போய் விடுகிறோம் என சொன்ன போது “வேண்டாங்க நாங்க பஸ்லயே போய்க்கிறோம். மத்தவங்களா இருந்தா இந்த மானோட நெலமயே வேற ...நீங்களா இருந்ததால அந்த மானுக்கு உயிர் தப்பிச்சுது”என்றார்கள்.
பிச்சை காரனுக்கு 5 ரூபாய் போட்டுவிட்டாலே... கவச குண்டலங்களோடு பிறந்தவனை போல feel செய்கிற நமக்கு ...உயிரை காப்பாற்றியாதவெல்லாம் சொன்னால் கேட்கவும் வேண்டுமா என்ன?.
எப்படி இருந்த போதும்..அந்த காட்டிற்க்கும் நமக்கும் ஏதோ ஒரு பந்தம் ஏற்பட்டுவிட்டதாக ஒரு உணர்வு.அந்த மான் எங்காவது தூரத்தில் நிற்பதையோ ,ஓடுவதையோ இன்னுமொருமுறை பார்த்து விட மாட்டோமா என்ற தேடலோடு காட்டை கடந்து வந்தோம்.